politics

img

அறிவியல் கதிர்

சுழலின் வேகம்

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து, மட்டை வீரர்களை பயமுறுத்துவதற்குக் காரணம் ‘ரிவர்ஸ் மாக்னஸ் விசை’ என்கிறார் ஐ ஐ டி கான்பூர் பேராசிரியர் சஞ்சய் மிட்டல். பும்ராவின் வேகம், பந்தைப் பிடிக்கும் விதம், சுழற்றிவிடும் வேகம் (1000 RPM) ஆகியவை அவரது பந்து வீச்சிற்கு இந்த விளைவைக் கொடுக்கின்றன. அவரது பந்து வீச்சில் ஏற்படும் ஒரு கீழ் நோக்கிய விசை அதை திடீரென தாழச் செய்கிறது. இதை மட்டை வீரர்களால் அடிக்க முடிவதில்லை. ‘ரிவர்ஸ் மாக்னஸ் விசை’ என்றால் என்ன?ஒரு சுழலும் பொருள் ஒரு திரவத்தில் செல்லும்போது அதன் பாதை மாறுபடுகிறது. சுழலாத பொருள் செல்லும்போது இது ஏற்படுவதில்லை. இந்த தத்துவம் கால்பந்து, பேஸ்பால், கிரிகெட் பந்து வீச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. எனவே பந்து விளையாட்டுகளின் இயற்பியலில் இது முக்கியமானதாகிறது. ஏவுகணைகளிலும் இது பயன்படுகிறது. மேலும் ரோட்டார் கப்பல், விமானம் ஆகியவற்றிலும் இந்த தத்துவம் பயன்படுகிறது.

விண்வெளி திட்டங்கள்

மனிதர்களுடன் கூடிய ‘ககன்யான்’ விண்வெளி திட்டம், சந்திரயான்2 போன்ற திட்டங்கள் தவிர மேலும் பல பணிகளை திட்டிமிட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இவற்றுள் மார்ஸ் ஆர்பிட்டர்2, சந்திரயான்3, வீனஸ் திட்டம், எக்ஸ்போசாட், ஆதித்தியாL1 (சூரியனின் வெளிவட்ட ஆய்வு) போன்றவை அடங்கும். ‘வீனஸ் பற்றிய ஆய்வில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அறிவியலாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து சுமார் 2௦ திட்டங்கள் வர இருக்கின்றன.’ என்கிறார் அவர்.(மே 19,2௦19)   

நிலவின் மறுபக்கம் 
நிலவின் மறு பக்கத்தில் முதன் முதலாக இறங்கிய விண்வெளிக் கலம் சீனாவுடைய Chang‘e-4 என்பதாகும். நிலவின் மேற்பரப்புக்கு அடுத்த மேன்டில்(mantle) எனும் பரப்பிலுள்ள பொருட்களை அது கண்டுபிடித்துள்ளது. எரிகற்கள் நிலவின் மேற்பரப்பை துளைத்து அதனடியிலுள்ள பொருட்களை மேலே கொண்டுவந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பி வந்தனர். இப்பொழுது அது நிரூபிக்கப்பட்டுள்ளது

லென்சின் வழியே
மும்பை ஐ.ஐ.டியை சேர்ந்த புவனேஸ்வரி கருணாகரன் என்ற ஆய்வாளர் ஒரு உருப் பெருக்கியைக் (LENS) கண்டுபிடித்துள்ளார். கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு, விந்து எண்ணிக்கைகள், ரத்த செல் ஆய்வு ஆகியவற்றில் இது பயன்படுமாம். சிலிக்கான் பாலிமர் எனும் பொருளுடன் தண்ணீர் சேர்த்துச் செய்யப்பட இந்த லென்ஸ் ஒரு ஸ்மார்ட் கைபேசியின் காமிராவின் மீது வைக்கப்பட்டு 1.5 மைக்ரான் அளவுள்ள சிறிய பொருளைக்கூட பார்க்க முடிகிறது. 

பில்டிங் ஸ்ட்ராங்! பேஸ்மென்ட் வீக்! 

அணுக் கழிவுகளை பத்திரமாக வைப்பதற்காக தொட்டி ஒன்று கட்டப்பட்டது. ‘கல்லறை’ என்றழைக்கப்பட்ட இது கதிர் வீச்சுப் பொருட்களை பசிபிக் கடலில் கசிய விட்டுக்கொண்டிருக்கலாம் என்று ஐ நா சபையின் செயலாளர் எச்சரித்துள்ளார். 1946-1958 பனிப் போர் காலங்களில் அமெரிக்கா நடத்திய அணு சோதனைகளின் கழிவுகளை இந்த தொட்டியில் கொட்டி வைத்திருந்தது. இதை 18 அங்குல கன கான்கிரீட் மூடி கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்த தொட்டி தற்காலிகமானது என்ற நோக்கில் அதன் அடிப்பகுதி பூசப்படவில்லை.

சிறிய கிருமியின் பெரிய உயிரணு 

மனித குடலில் காணப்படும் ஈ கோலி(E. coli bacterium) எனும் கிருமியின் டி என் ஏ வை(DNA) கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் முற்றிலுமாக கட்டமைத்துள்ளார்கள். இந்த மாற்றியமைக்கப்பட்ட உயிர்ப்பொருள் மூலம் செயற்கை செல்லை உண்டாகியிருக்கிறார்கள். இதில் ஜி,ஏ,டி,சி  எனும் நாற்பது லட்சம் அடிப்படை இணைகள் உள்ளன. இதை ஏ4 பேப்பரில் அச்சிட்டால் கிட்டத்தட்ட 1௦௦௦ பக்கங்களுக்கு வருமாம். இதுதான் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய உயிரணு.